“வரலாறு எங்களை எட்டப்பர்களாக அல்ல கட்டபொம்மன்களாகவே மதிப்பிடும்” - ராகுல் காந்திக்கு ஸ்டாலின் பதிலடி!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரிக்கை விடுத்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு, தமிழ்நாட்டின் நலன் கருதியே எப்போதும் திமுக முடிவெடுக்கும் எனத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மு.க. ஸ்டாலின், "தமிழ்நாட்டின் நலன், மக்களின் நலன் கருதியே எப்போதும் ஒவ்வொரு முடிவையும் திமுக எடுத்துள்ளது. இந்தப் பாதையில் இருந்து நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.
"வரலாறு எங்களை எட்டப்பர்களாக அல்ல கட்டபொம்மன்களாகவே மதிப்பிடும், எங்கள் நிலைப்பாட்டில் ஒருபோதும் சமரசம் கிடையாது. அரசியலமைப்பைப் பாதுகாப்பதில் திமுகவின் பங்கை அங்கீகரித்த ராகுலுக்கு நன்றி" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களவைத் தொகுதிகளை 850 இடங்களாக விரிவாக்கும் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டின் தற்போதைய விகிதாச்சாரப் பங்கு பாதுகாக்கப்படுவதாகக் கூறி மசோதாவுக்கு ஆதரவு அளிக்கத் திமுக முடிவெடுத்துள்ளது. இதையடுத்து இரு தலைவர்களிடையே சமூக வலைதளங்களில் கருத்து மோதல் தீவிரமடைந்துள்ளது.