கனமழை எதிரொலி; ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3,000 கனஅடியாக அதிகரிப்பு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. ஒகேனக்கல்லில் அதிகபட்சமாக 14.24 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான பிலிகுண்டுலு, ராசிமணல், அஞ்செட்டி, கேரட்டி உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்ததால், ஒகேனக்கல்லுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 2,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 6 மணி நிலவரப்படி 3,000 கனஅடியாக உயர்ந்தது.
இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. காவிரி ஆற்றிலும் செந்நிறத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சின்னாற்றிலும் நீர்வரத்து அதிகரித்து, காவிரியில் கலக்கிறது.