தொடர் விடுமுறை நிறைவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்!

 

விநாயகர் சதுர்த்தி வார இறுதி மற்றும் தொடர் விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்குத் திரும்புவோரின் வருகையால் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் சென்னை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மற்றும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் முன்பதிவு இருக்கைகள் முழுமையாக நிரம்பின. மேலும், நாகர்கோவிலிருந்து தாம்பரம் செல்லும் முன்பதிவில்லா அந்தியோதயா ரயிலில் பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறியதுடன், இடமின்றி நின்றும் தரையில் அமர்ந்தும் பயணம் செய்தனர்.

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பூர் மற்றும் மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளில் பயணிகள் போட்டிபோட்டு ஏறினர்.

ஒரே நேரத்தில் சென்னையை நோக்கி தென்மாநிலங்களில் இருந்து வாகனங்களில் பலர் கிளம்பி வந்த நிலையில், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பயணிகள் வருகை அதிகரிப்பைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தேவைக்கேற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதற்கிடையே, விழாக்காலங்களில் நெரிசலைத் தவிர்க்கக் கூடுதலாகச் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.