குஷியில் இல்லத்தரசிகள்... தங்கம் விலை கடும் சரிவு; சவரன் ரூ.97,720-க்கு விற்பனை!
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களின் எதிரொலியாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்குத் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று அதிரடியாகச் சரிந்துள்ளது. இந்த ஆண்டிலேயே முதன்முறையாக ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்து நகைப் பிரியர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) விலை ரூ.255 குறைந்து ரூ.12,215-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.2,040 சரிந்து, ரூ.97,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.185-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.1,85,000-க்கும் விற்பனையாகிறது.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றது முதல், பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியாகின. குறிப்பாக, பிற நாடுகளின் மீதான இறக்குமதி வரி விதிப்பு, அமெரிக்கப் பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் மற்றும் டாலர் மதிப்பு சரிவு ஆகியவற்றால் கடந்த ஆண்டில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. பின்னர் பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு வரிகள் தளர்த்தப்பட்டதால் விலை ரூ.1 லட்சத்திற்குக் கீழ் சென்றாலும், ஆண்டின் இறுதியில் மீண்டும் ஏற்றம் கண்டது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தங்கம் விலையேற்றம் நீடித்த நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் எதிரொலியாகக் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, தங்கம் மற்றும் பங்குச்சந்தை முதலீடுகளில் கடும் ஏற்ற இறக்கங்கள் நிலவின. ஜூன் மாதத்தில் தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தங்கம் விலை நிலையற்ற தன்மையுடன் காணப்பட்டது.
சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் அதிபர் டிரம்ப் பின்னடைவைச் சந்தித்த சூழலில், ஈரான் மீதான போரை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போர் பதற்றம் தணிந்துள்ளதால் சர்வதேசப் பங்குச்சந்தைகள் மீண்டும் வலுவான ஏற்றம் காணத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாகப் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்பட்ட தங்கத்தின் மீதான முதலீடுகளைக் குறைத்து, முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையை நோக்கித் திரும்பியுள்ளனர். இந்தப் பொருளாதார மாற்றமே உள்நாட்டுச் சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை சரசரவெனச் சரிவதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.