காரைக்குடியில் "ஹனி ட்ராப்" மோசடி... பைனான்ஸியரை நிர்வாணமாக்கி மிரட்டிய பெண்!
தனிமையில் சந்திக்கலாம் என ஆசை வார்த்தைகளைக் கூறி, நிதி நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபர் ஒருவரைப் பழைய ஓட்டு வீட்டிற்கு வரவழைத்து, வலுக்கட்டாயமாக நிர்வாணமாக்கி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய "ஹனி ட்ராப்" கும்பலைச் சேர்ந்த பெண் உட்பட இரண்டு பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் பிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல் (40). பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவருக்கு, கடந்த ஜூன் மாதம் அறிமுகமில்லாத எண் ஒன்றிலிருந்து அழைப்பு வந்துள்ளது. செல்போனில் பேசிய பெண், தனது பெயர் கவிதா என்று அறிமுகப்படுத்திக் கொண்டு வடிவேலிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். தனக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகக் கூறி, கடந்த ஜூன் 9-ஆம் தேதி வடிவேலிடமிருந்து கூகுள் பே மூலமாக ரூ.4,500 பெற்றுள்ளார்.
பணப் பரிவர்த்தனைக்குப் பிறகு, இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசித் தங்களது பழக்கத்தை நெருக்கமாக்கிக் கொண்டுள்ளனர். நாளாக நாளாக, வடிவேலிடம் நயமாகப் பேசிய அந்தப் பெண், "காரைக்குடிக்கு வந்தால் நாம் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருக்கலாம்" என ஆசை வார்த்தைகளைக் கூறி வலை வீசியுள்ளார்.
அந்தப் பெண்ணின் ஆசை வார்த்தைகளை முழுமையாக நம்பிய வடிவேல், கடந்த ஜூன் 24-ம் தேதி திருப்பத்தூரிலிருந்து காரைக்குடிக்குச் சென்றுள்ளார். அங்கு அவரைச் சந்தித்த கவிதா, "கொஞ்சம் தனிமையாகப் பேசலாம்" என்று கூறி, அங்கிருந்த ஒரு பழைய ஓட்டு வீட்டிற்கு வடிவேலை அழைத்துச் சென்றுள்ளார்.
அவர்கள் வீட்டிற்குள் நுழைந்த உடனே வடிவேலுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஏற்கனவே ரகசியமாகப் பதுங்கியிருந்த மர்ம நபர்கள் சிலர் திடீரென வெளியே வந்து வடிவேலைச் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் வடிவேலைத் தாக்கி, அவரது ஆடைகளைக் கட்டாயப்படுத்தி களைத்து நிர்வாணமாக்கினர். தொடர்ந்து, அந்த நிலையை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, ரூ.50 லட்சம் பணம் தராவிட்டால் சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
தன்னிடம் அவ்வளவு பெரிய தொகை தற்போது இல்லை என்று வடிவேல் கெஞ்சியதை அடுத்து, அவரிடமிருந்த ஹோண்டா இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
இச்சம்பவத்தால் நிலைகுலைந்த வடிவேல், எப்படியோ தப்பித்துத் தனது வீட்டிற்குச் சென்றார். பின்னர், இச்சம்பவம் குறித்துக் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார்.
புகாரின் பேரில் உடனடியாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்தனர். காரைக்குடி புதிய பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளைப் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். தொழில்நுட்ப உதவியுடன் நடத்தப்பட்ட இந்த விசாரணையில், இந்தத் திட்டமிட்ட மோசடிக்கு முக்கியக் மூளையாகச் செயல்பட்ட கவிதா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்து தாக்குதலில் ஈடுபட்ட தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இக்கும்பலில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள இதர நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் காரைக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.