ஆணவக் கொலை? தங்கை சோஃபியாவைச் சுத்தியலால் அடித்துக் கொன்ற அண்ணன்...  விபத்து போல் நாடகமாடிய தந்தை !

 

 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரைக் காதலித்து வந்த சோஃபியா என்ற இளம் பெண், அவரது சொந்த அண்ணனாலேயே சுத்தியலால் அடித்துக் கொடூரமாக ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அகமதாபாத்தைச் சேர்ந்த சோஃபியா என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்குக் குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், சோஃபியாவை அவரது உடன் பிறந்த அண்ணன் சுத்தியலால் பலமாகத் தாக்கி ஆணவக் கொலை செய்துள்ளார்.இந்தக் கொலைச் சம்பவத்தை மூடி மறைப்பதற்காக, சோஃபியா சாலை விபத்தில்தான் உயிரிழந்ததாக அவரது தந்தையும் அண்ணனும் சேர்ந்து திட்டமிட்டுப் பொய் நாடகமாடியுள்ளனர்.

 

விபத்து என்று கூறப்பட்டாலும், உடலில் இருந்த காயங்களின் தன்மையில் சந்தேகம் அடைந்த போலீசார் இதுகுறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இது திட்டமிடப்பட்ட ஆணவக் கொலை என்பதும், விபத்து போல் சித்தரிக்கப்பட்டதும் வெளிச்சத்திற்கு வந்தது. இதனைக் தொடர்ந்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக முயன்ற சோஃபியாவின் அண்ணன் மற்றும் தந்தை ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.