ஆணவக்கொலை... காதலனின் சடலத்தோடு பந்தல் ஏறி தாலி கட்டிய காதலிக்கு மாமனார் வீட்டில் நேர்ந்த கொடுமை!
மகாராஷ்டிர மாநிலச் சாதி மறுப்புக் காதல் கொலை விவகாரத்தில், தற்போது அடுத்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த சாக்ஷம் எனும் வாலிபரும், ஆஞ்சல் மமித்வார் என்ற இளம்பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்குப் பெண் வீட்டார் தரப்பில் கடுமையான சாதி வெறி காரணமாகப் பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
இந்நிலையில், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதலனைத் தான் கைபிடிப்பேன் என்பதில் ஆஞ்சல் உறுதியாக இருந்ததால், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற சாதி வெறியர்கள், காதலன் சாக்ஷமைத் திட்டமிட்டுப் பயங்கரமான முறையில் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்தனர்.
தன் கண்முன்னே ஆசைக் காதலன் சடலமாகக் கிடப்பதைக் கண்டு துடித்த காதலி ஆஞ்சல், அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு துணிச்சலான முடிவை எடுத்தார். உயிரிழந்த காதலன் சாக்ஷமின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடக்கும் முன்பாக, அவனது சடலத்தின் நெற்றியில் குங்குமம் திலகமிட்டு, அவனது கைகளால் தனது கழுத்தில் தாலி கட்டச் செய்து, சடலத்துடன் பந்தல் ஏறி முறைப்படி கணவனாக ஏற்றுக் கொண்டார். இந்த நெகிழ்ச்சியான திருமணச் சம்பவம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
திருமணத்திற்குப் பிறகு, சாக்ஷமைத் தனது கணவனாகவே நினைத்து அவனது பெற்றோர் வீட்டிற்கு (புகுந்த வீட்டிற்கு) ஆஞ்சல் மருமகளாகக் குடியேறினார். ஆனால், அங்கும் அவருக்கு ஒரு கொடுமை காத்துக் கொண்டிருந்தது. உயிரிழந்த சாக்ஷமின் சொந்த வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர் ஒருவர், ஆதரவற்ற நிலையில் தனியாக இருந்த மருமகள் ஆஞ்சலிடம் மிக மோசமான முறையில் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆஞ்சல், இக்கொடூரச் சம்பவம் குறித்துத் தனது மாமனார், மாமியாரிடம் கண்ணீர் மல்க முறையிட்டுள்ளார். ஆனால், பெத்த மகனை இழந்துவிட்ட சோகத்தில் இருந்த சாக்ஷமின் பெற்றோர்கள், தங்களது குடும்ப உறுப்பினரைக் காப்பாற்றும் நோக்கில், மருமகளின் பேச்சை துளியும் நம்பாமல் அவரையே மிரட்டித் திருப்பி அனுப்பியுள்ளனர்.
புகுந்த வீட்டிலும் தமக்கு நீதி கிடைக்காமல், உயிருக்கு ஆபத்துச் சூழல் நிலவியதால் துணிச்சலாகச் செயல்பட்ட ஆஞ்சல், தற்போது காவல் நிலையத்தை தஞ்சமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாக்ஷமின் வீட்டை விட்டு ஆஞ்சல் கண்ணீரோடு வெளியேறியுள்ளார்.
வீட்டை விட்டு வெளியேறும் போது செய்தியாளர்களிடம் பேசிய ஆஞ்சல், "என் புகுந்த வீட்டில் உள்ள ஒரு காமுகன் என்னிடம் தவறாக நடந்துக் கொண்டான். அதை என் மாமனாரிடம் கூறியும் அவர்கள் நியாயத்தின் பக்கம் நிற்காமல் அந்தப் பாவியை நம்புகிறார்கள். இதனால் நான் போலீஸ் பாதுகாப்புடன் வீட்டை விட்டு வெளியேறுகிறேன். என் கணவர் சாக்ஷம் என் நெஞ்சில் வாழ்கிறார், எங்களது உன்னதமான காதல் என்றும் தொடரும்" என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார். காதலன் கொல்லப்பட்ட நிலையில், அவனது சடலத்தைத் திருமணம் செய்த பெண்ணுக்குப் புகுந்த வீட்டிலேயே நேர்ந்த இந்த அநீதி தேசிய அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.