காலையிலேயே பயங்கரம்... தூங்கிக் கொண்டிருந்த மகனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற தந்தை!

 

தமிழகத்தின் தென் மாவட்டமான தூத்துக்குடியில் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் உலுக்கும் படியான ஒரு கொடூரமான குடும்பக் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் பகுதியில், குடும்பத் தகராறு காரணமாகத் தந்தை ஒருவரே தனது சொந்த மகனை நள்ளிரவில் உயிரோடு தீயிட்டுக் கொளுத்திக் கொலை செய்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மடத்தூர் பகுதியைச் சேர்ந்த தாளமுத்து என்பவருக்கும், அவரது மகன் அருள்ராஜ் என்ற வாலிபருக்கும் இடையே கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாகக் கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்று திகாலை நேரத்தில், வாலிபர் அருள்ராஜ் தனது வீட்டின் முன்புறம் உறக்கத்தில் இருந்துள்ளார். அப்போது கடுமையான மது போதையில் வீட்டிற்கு வந்த தந்தை தாளமுத்து, முந்தைய தகராறை மனதில் வைத்து, தூங்கிக் கொண்டிருந்த தனது மகன் என்றும் பாராமல் அருள்ராஜ் மீது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை  ஊற்றித் தீ வைத்துள்ளார்.

தீ உடல் முழுவதும் மளமளவெனப் பரவியதால் அருள்ராஜ் வலியால் அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாகத் தீயை அணைக்க முயன்றனர். எனினும், உடல் கருகிய நிலையில் அருள்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த உள்ளூர் போலீசார், அருள்ராஜின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட தந்தை தாளமுத்துவைக் கைது செய்து, கொலைக்கான பின்னணி குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் தந்தையே மகனை எரித்துக் கொன்ற இந்த  சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.