கொடூரம்... காதலிக்க மறுப்பு... இளம்பெண் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை..!
புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரில் வசித்து வந்தவர் ரவி. இவரது மகள் ஷர்மிளா (28), அண்ணா சாலையில் உள்ள ஒரு துணிக்கடையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் இந்திரா நகரில் வசித்து வருபவர் 36 வயது டிரைவர் ஜோசப். இவர்கள் இருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளாகப் பழக்கம் இருந்துள்ளது.ஏற்கனவே விவாகரத்து பெற்ற ஜோசப்பின் நடவடிக்கைகள் பிடிக்காததால், ஷர்மிளா அவருடனான காதலைத் துண்டித்துக் கொண்டார்.இதனால் ஆத்திரம் அடைந்த ஜோசப், ஷர்மிளாவுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து போலீஸார் ஏற்கனவே ஜோசப்பை அழைத்து எச்சரிக்கை கொடுத்து அனுப்பியுள்ளனர்.
கடந்த 13-ம் தேதி இரவு, ஷர்மிளா வேலை முடிந்து உழவர் சந்தை வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் அவரைப் பின்தொடர்ந்த ஜோசப், மீண்டும் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.ஷர்மிளா அதற்கு உடன்படாததால், ஆத்திரமடைந்த ஜோசப் தன்னிடம் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை ஷர்மிளா மீது ஊற்றித் தீ வைத்துள்ளார்.உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் ஷர்மிளா அலறியபடி ஓடியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவத்தில் ஜோசப்புக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டது.
சுமார் 80 சதவீதத்திற்கும் மேலான தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ஷர்மிளா, நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, இந்த வழக்கை ஒதியஞ்சாலை போலீஸார் கொலை வழக்காக மாற்றினர்.காவல்துறையிடம் கைதான ஜோசப் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது:"ஷர்மிளா என்னைத் தவிர்க்கத் தொடங்கினார். அவர் வேறு ஒருவருடன் பழகுவதைக் கண்டித்தேன். ஆனால் அவர் அதைக் கேட்கவில்லை. என்னை முற்றிலுமாகப் புறக்கணித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.பெண்களுக்கு எதிரான இத்தகைய வன்முறைகள் புதுச்சேரியில் அதிகரிப்பதாகக் கூறி சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.