கர்நாடகாவில் கோர விபத்து;  பிரபல ஒளிப்பதிவாளர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

 

கர்நாடகா மாநிலத்தில் அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதிய விபத்தில் 5 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். டயர் வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் மொலகால்முரு என்ற இடத்திற்கு அருகே இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

சல்லகெரே பகுதியிலிருந்து இளைஞர்கள் சிலர் காரில் அதிவேகமாகப் பயணித்துக் கொண்டிருந்தனர். மொலகால்முரு அருகே கார் சென்றபோது, எதிர்பாராத விதமாக காரின் முன்பக்க டயர் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்தது.

டயர் வெடித்த வேகத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி ஒன்றின் பின்புறத்தில் மிகக் கோரமாக மோதி நொறுங்கியது.

காரின் முன் பகுதி லாரியின் அடியில் சிக்கி முழுமையாகச் சிதைந்ததில், காரில் இருந்த 5 பேரும் கடுமையான காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்துத் தகவல் அறிந்து வந்த உள்ளூர் மக்கள் மற்றும் போலீசார் காரின் இடிபாடுகளை வெட்டி எடுத்து உடல்களை மீட்டனர். ராகவேந்திரா (பிரபல ஒளிப்பதிவாளர்), பிரமோத், ருத்ரேஷ், சோமு, மல்லிகார்ஜுனா என ஐந்து பேரும் பலியாகி உள்ளனர். அனைவரும் சல்லகெரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்விற்காக அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து தொடர்பாக மொலகால்முரு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான கூடுதல் காரணங்கள் மற்றும் லாரி அங்கே நிறுத்தப்பட்டிருந்த விதம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள் விபத்தில் பலியான சம்பவம் சல்லகெரே பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.