மதுரையில் கோர விபத்து.. 3 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

 

நேற்று மாலை, மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே அய்யாபட்டி பிரதானச் சாலையில் நடந்த கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சியிலிருந்து மதுரை நோக்கி அதிவேகமாக சென்றுக் கொண்டிருந்த ஒரு சொகுசு கார், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சாலையின் பக்கவாட்டில் இருந்த பாதுகாப்புச் சுவரில் கொடூரமாக மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியதில், காரில் பயணித்த 3 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

விபத்து நடந்த உடனே அங்கிருந்த உள்ளூர் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், மீட்புப் பணிகளுக்காகக் கொட்டாம்பட்டி காவல் நிலையத்திற்குத் தங்களது அலைபேசிகள் மூலம் அவசரத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொட்டாம்பட்டி காவல் நிலையப் போலீசார், காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த உயிரிழந்தவர்களின் உடல்களைப் பொதுமக்களின் உதவியோடு மீட்டனர்.

பின்னர் சடலங்களை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியானவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் மற்றும் விபத்து நடந்ததற்கான முதன்மைக் காரணி என்ன என்பது குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.