சிவகங்கையில் கோர விபத்து... 'ஜனநாயகன்' படம் பார்த்துவிட்டுத் திரும்பிய 3 இளைஞர்கள் உயிரிழப்பு!
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதி அருகே நள்ளிரவில் இந்தச் சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது:
விபத்தில் சிக்கி பாண்டியராஜன் (32), வெங்கடேஷ் (27) மற்றும் சக்கரவர்த்தி (22) ஆகிய 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், இவர்கள் மூவரும் திரையரங்கில் புதிதாக வெளியாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிய போது இந்த விபத்து நேரிட்டது தெரிய வந்தது. சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
உயிரிழந்த மூன்று இளைஞர்களின் உடல்களையும் மீட்ட காவல் துறையினர், உடற்கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாகப் வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், விபத்துக்கான காரணம் குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.