திருச்சூரில் கோர விபத்து... தமிழக கல்லூரி மாணவர்கள் 8 பேர் பலி! 

 

கேரளாவில் லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த திண்டுக்கல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம், பனம்பிக்குன்னு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில், நள்ளிரவு 11:40 மணியளவில் தமிழகப் பதிவு எண் கொண்ட கார் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

கார் முற்றிலுமாகச் சிதைந்ததில், உள்ளே பயணம் செய்த 8 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காகத் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

உயிரிழந்த அனைவரும் திண்டுக்கல்லில் உள்ள பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர். இவர்கள் குருவாயூரிலிருந்து கொடுங்கல்லூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நேர்ந்துள்ளது.

அடையாளம் காணப்பட்டவர்கள்: விபத்தில் உயிரிழந்தவர்களில் சிலரது விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, சேலத்தைச் சேர்ந்த விஸ்வா (20), திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யா (20), மதுரையைச் சேர்ந்த சந்தோஷ் (20), பிரசன்னா மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த யுவசஞ்சித் (20) உள்ளிட்டோர் முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.