எகிப்து நெடுஞ்சாலையில் கோர விபத்து: எரிபொருள் டேங்கர் வெடித்து 31 பேர் பலி... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!
எகிப்து தலைநகர் கெய்ரோ அருகே ரிங் ரோடு நெடுஞ்சாலையில் எரிபொருள் டேங்கர் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த எரிபொருள் டேங்கரின் முன்னால் உயர் மின்னழுத்தக் கம்பி அறுந்து விழுந்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தீ வேகமாகப் பரவியதில் 27 கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின.
சம்பவ இடத்தில் சிக்கியவர்களை மீட்க முயன்ற பேருந்துப் பயணிகள் 14 பேரும் தீயில் சிக்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து வரலாற்றில் பதிவான மிக மோசமான எரிபொருள் டேங்கர் விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.