தாயின் கண்முன்னே கொடூரம்... சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 2 வயதுக் குழந்தை உயிரிழப்பு! 

 

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் ரயில்வே கேட் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில், தாயின் கண்முன்னே நடந்த கொடூர ரயில் விபத்து பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி விக்னேஷ், அவரது மனைவி சரிதா தம்பதியினருக்கு விதுன் என்ற 2 வயது ஆண் குழந்தை இருந்தது. நேற்று மதியம் வெயிலுக்கு மத்தியில், குழந்தை விதுன் தங்களது வீட்டின் வாசலில்  விளையாடிக் கொண்டு இருந்துள்ளான். அப்போது அவனது தாய் சரிதா, தண்ணீர் பிடிப்பதற்காகக் குடத்தை எடுத்துக் கொண்டு கொஞ்சம் தூரத்தில் இருந்த பொதுக் குழாயை நோக்கி சென்றுள்ளார்.

இந்நிலையில் விளையாட்டுத் தனமாக வீட்டை விட்டு வெளியேறிய 2 வயதுக் குழந்தை விதுன், தத்தித் தத்தி நடந்து அருகில் இருந்த பிரதான ரயில் தண்டவாளப் பகுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளான். குழந்தை தண்டவாளத்தின் நடுவே நின்றிருந்த அந்த நேரத்தில், திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி அதிவேகமாக வந்துக் கொண்டிருந்த 'சோழன் எக்ஸ்பிரஸ்' விரைவு ரயில் கண்சிமிட்டும் நேரத்திற்குள் அங்கே வந்து சேர்ந்தது.

தண்டவாளத்தில் குழந்தை நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இன்ஜின் டிரைவர் தொடர்ச்சியாக ஆபத்துக்கால ஒலியை  எழுப்பியும், ரயிலை நிறுத்த பிரேக் போட்டபோதிலும், அதிவேகமாக வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் குழந்தை விதுன் மீது கொடூரமான முறையில் மோதியது. இந்த விபத்தில் உடல் நசுங்கித் தூக்கி வீசப்பட்ட குழந்தை விதுன், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தது.

தண்ணீர் எடுத்துவிட்டுத் திரும்பி வந்த தாய் சரிதா, தனது ஆசைக் குழந்தை தண்டவாளத்தில் சடலமாக கிடப்பதைக் கண்டு நிலைகுலைந்து, நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறி அழுத அழுகுரல் ஒட்டுமொத்தக் கிராமத்தையே கண்கலங்க வைத்தது.

இத்துயரச் சம்பவம் குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நெல்லிக்குப்பம் மற்றும் கடலூர் ரயில்வே போலீசார், குழந்தையின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.