கோவை அரசு மருத்துவமனையில் கொடூரம்... ரத்தம் ஏற்றிய பின் குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று - கலெக்டரிடம் கதறீய தந்தை!

 

கோவை அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றிய பிறகு தன் மகளுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதாகக் கூறி, காடாம்பாடியைச் சேர்ந்த தந்தை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமாரிடம் கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் காடாம்பாடியைச் சேர்ந்த நபரின் மகளுக்கு கடந்த 2018-ம் ஆண்டு ரத்த சோகை காரணமாகக் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு ரத்தம் ஏற்றப்பட்டது. சில மாதங்களில் குழந்தைக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்படவே, மருத்துவமனையில் நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில் குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டு பெற்றோருக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெற்றோர் மற்றும் மற்றொரு குழந்தைக்குப் பரிசோதனை செய்ததில் யாருக்கும் எச்.ஐ.வி தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அரசு மருத்துவமனையில் ஏற்றப்பட்ட ரத்தம் மூலமாகவே குழந்தைக்கு எச்.ஐ.வி பரவியதாகப் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பாகப் பல ஆண்டுகளாக மருத்துவமனை நிர்வாகத்திடமும் காவல்துறையிடமும் புகார் அளித்தும் இதுவரை எந்தவொரு உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஆட்சியரிடம் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தின் சூழ்நிலையையும், நோயுடன் போராடும் மகளின் நிலையையும் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், முதலமைச்சர் தனிப் கவனமெடுத்து இலவச மனை அல்லது வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.