பெங்களூருவில் கொடூரம்... ‘எப்பவுமே ரீல்ஸ் தான்..” - மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை!
பெங்களூருவில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு விபூதிபுராவைச் சேர்ந்த 38 வயது ஆட்டோ ஓட்டுநர் ராகவேந்திரா, அவரது 30 வயது மனைவி ஸ்ருதி (வீட்டுப் பணிப்பெண்). இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அவர்கள் தாவணகெரேயில் உள்ள ஸ்ருதியின் பெற்றோர் வீட்டில் வசித்து வருகின்றனர்.
மனைவி ஸ்ருதி முறையாகச் சமைப்பதில்லை என்றும், எப்போதும் கைபேசியில் மூழ்கி ரீல்ஸ் பார்த்து வருவதாகவும் ராகவேந்திரா அடிக்கடி புகார் கூறி வந்துள்ளார். மறுபுறம், ராகவேந்திரா மது அருந்தும் பழக்கம் உடையவர் என ஸ்ருதியும் குற்றம் சாட்டியுள்ளார். இவர்களுக்கிடையேயான சண்டை முற்றியதால் அண்மையில் காவல் நிலையம் வரை சென்றனர். அங்கு காவல்துறையினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு வந்த ராகவேந்திரா, ஸ்ருதி மீண்டும் செல்போனில் மூழ்கியிருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தில், பீர் பாட்டிலால் குத்தி ஸ்ருதியை அவர் கொன்றுள்ளார். பின்னர் மதுபோதையில் இருந்த ராகவேந்திராவும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.