காஞ்சிபுரத்தில் கொடூரம்... பிரசவத்திற்கு அனுமதிக்காத கடை உரிமையாளர் - தாயும், சிசுவும் மரணம் - உறவினர்கள் போராட்டம்!

 

காஞ்சிபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கம் பகுதியில், பிரசவத்திற்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் கூடாரத்திலேயே கர்ப்பிணிப் பெண்ணும் அவரது பச்சிளம் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் சிங்காடிவாக்கம் பகுதியில் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் தேன்மொழி. இவருக்குக் கர்ப்ப காலத்தின் போது உரிய மருத்துவ வசதிகள் கிடைக்காத சூழல் நிலவியுள்ளது. இந்நிலையில் தேன்மொழிக்கு அங்கிருந்த கூடாரத்திலேயே கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது குழந்தை பாதி வெளியே வந்த நிலையில், தனது மனைவியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்குமாறு தேன்மொழியின் கணவர் மரக்கடை உரிமையாளரிடம் கேட்டுள்ளார். ஆனால், வேலைக்குச் செல்ல வேண்டியிருப்பதாகக் கூறிய மரக்கடை உரிமையாளர் அவர்களை மருத்துவமனைக்குச் செல்ல அனுமதி மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காத காரணத்தினால், தாயும் பாதி வெளியே வந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உரிய மருத்துவ உதவி கிடைக்கக் காரணமாக இருந்த மரக்கடை உரிமையாளரைக் கண்டித்தும், நீதி கோரியும் தேன்மொழியின் கணவரும் உறவினர்களும் உடலைக் கைப்பற்றிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.