நடுரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... மதுபான பாரின் வெளியே பயங்கரம்!

 

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள பிரிஸ்டல் சௌக் பகுதியில், இளம் பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் நடுரோட்டில் வைத்து சரமாரியாகத் தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று புதன்கிழமை இரவு ஒரு மதுபான பாரின் வெளியே இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த நிலையிலும், அந்த நபர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பெண்ணை கொடூரமாகத் தாக்கியது காண்போரை அதிர வைத்துள்ளது.

சம்பவத்தன்று அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அந்த நபர், அந்தப் பெண்ணை நிலைகுலையச் செய்யும் வகையில் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார். சாலையில் சென்றவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போதிலும், அந்த இளைஞரின் ஆக்ரோஷத்தைக் கண்டு யாரும் உடனடியாகத் தடுக்க முன்வரவில்லை. இந்த மனிதாபிமானமற்ற செயல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை பாதிக்கப்பட்ட பெண் தரப்பிலிருந்தோ அல்லது மற்றவர்களிடமிருந்தோ காவல்துறைக்கு முறையான புகார் ஏதும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், வைரலாகும் வீடியோவின் அடிப்படையில் குருகிராம் போலீசார் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். குற்றவாளியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் மீண்டும் ஒருமுறை எழுந்துள்ளன. அந்தப் பெண் யார் மற்றும் தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.