தீபாவளி நாளில் கொடூரம்... இரட்டைக் கொலையால் அதிர்ந்த திருச்சி... 17 வயதே ஆன 2 சிறுவர்கள் வெட்டிக்கொலை!
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே புள்ளம்பாடி வாய்க்கால் கரையில் 17 வயதே ஆன இரண்டு சிறுவர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள புள்ளம்பாடி வாய்க்கால் கரை பகுதியில் நேற்று இரண்டு இளைஞர்களின் உடல்கள் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாகச் சமயபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சமயபுரம் காவல்துறையினர், இருவரின் சடலங்களையும் கைப்பற்றிப் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையில், படுகொலை செய்யப்பட்டவர்கள் ராகுல் (17) மற்றும் விஷால் (17) என்பதும், இவர்கள் இருவரும் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்த சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது. தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ராகுல் மற்றும் விஷாலின் உடல்கள் உடனடியாகப் பிரேதப் பரிசோதனைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த கொடூரக் கொலையைச் செய்தது யார், என்ன காரணத்திற்காகச் சிறுவர்கள் இலக்கு வைக்கப்பட்டனர் என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தனிப்பட்ட முன்விரோதம் அல்லது பழிக்குப்பழியாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்தில் சமயபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தொடர் விசாரணையின் முடிவிலேயே இந்தக் கொலைக்கான முழுமையான காரணங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.