கடலூரில் கொடூரம்... ஒரே நாளில் தெருநாய் கடித்து 25-க்கும் மேற்பட்டோர் காயம்!

 

கடலூர் மாவட்டம் புவனகிரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே நாளில் வெறிநாய் ஒன்று 25-க்கும் மேற்பட்டோரைக் கடித்துக் குதறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

புவனகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று, வீதிகளில் நடந்து சென்ற பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களை அடுத்தடுத்துக் கடித்துத் தாக்கியுள்ளது. இந்த திடீர் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 25-க்கும் மேற்பட்டோர் உடல்நலக் குறைவு மற்றும் காயங்களுக்கு உள்ளாகினர்.

காயமடைந்த அனைவரும் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சையும் ரேபிஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.

நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் அச்சுறுத்தலாக உலா வரும் தெருநாய்களைக் கட்டுப்படுத்தவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் உள்ளாட்சி நிர்வாகம் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.