கிருஷ்ணகிரியில் கொடூரம்... கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ராணுவ வீரர் மற்றும் மாமனார் எரித்துக் கொலை

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ராயக்கோட்டை செல்லும் பாதையோரம், அரை கிலோ மீட்டர் இடைவெளியில் இரண்டு உடல்கள் தீயால் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாலுக்கா போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தால் இந்த இரட்டைக் கொலை அரங்கேறியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

போலீசாரால் மீட்கப்பட்ட உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி விசாரித்ததில், தீக்கிரையாக்கப்பட்டவர்களில் ஒருவர் பாலகுறி பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் மகேஷ்குமார் என்பதும், மற்றொருவர் அவருடைய தந்தை செல்லப்பன் என்பதும் உறுதி செய்யப்பட்டது. மகேஷ்குமார் ராணுவப் பணியின் காரணமாக அடிக்கடி வெளியூர் சென்று வந்த நிலையில், அவரது தந்தை செல்லப்பனுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

மகேஷ்குமார் ராணுவப் பணியில் இருந்த காலக்கட்டத்தில், அவருடைய மனைவி பானுப்பிரியாவுக்கு மேல்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் என்ற 19 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. வெளியூரிலிருந்து ஊருக்குத் திரும்பிய மகேஷ்குமாருக்கு இந்த விவகாரம் தெரியவந்ததால், அவருக்கும் பானுப்பிரியாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தங்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனையும், அவருக்குத் துணையாக இருக்கும் மாமனாரையும் தீர்த்துக்கட்ட பானுப்பிரியாவும் பூவரசனும் திட்டம் தீட்டியுள்ளனர்.

திட்டமிட்டபடி ஒரு நாள் இரவு, மகேஷ்குமார் மற்றும் அவரது தந்தை செல்லப்பன் இருவரையும் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பின்னர், இருவரது உடல்களையும் இருசக்கர வாகனங்களில் ஏற்றி, ராயக்கோட்டை சாலையோரப் பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு உடல்கள் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக, தென்னை ஓலைகளைக் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் ஊற்றி தீ வைத்துள்ளனர். போலீசாரின் திசைதிருப்பும் நோக்கில், இரண்டு உடல்களையும் அரை கிலோ மீட்டர் இடைவெளியில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

சாலையோரம் கருகிய நிலையில் உடல்கள் இருப்பது குறித்துத் தகவல் அறிந்த தாலுக்கா போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணையில் இறங்கினர். சம்பவ இடத்திலிருந்த வாகனத் தடயங்கள், சுற்றுப்புறச் சாட்சியங்கள் மற்றும் செல்போன் சிக்னல்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணையைத் துரிதப்படுத்தினர். கொலை நடந்த 24 மணி நேரத்திற்குள் பானுப்பிரியா மற்றும் பூவரசன் ஆகிய இருவரையும் போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். விசாரணையில், தங்களின் கள்ளக்காதல் இன்பத்திற்காக இருவரையும் கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர்.

பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்திய இந்த இரட்டைக் கொலை வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் உத்தரவின் பேரில் குற்றவாளிகள் இருவர் மீதும் குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. இதையடுத்து, பூவரசன் சேலம் மத்திய சிறையிலும், பானுப்பிரியா கோயம்புத்தூர் மகளிர் சிறப்பு சிறையிலும் பலத்த பாதுகாப்புடன் அடைக்கப்பட்டுள்ளனர்.