மூணாறில் கொடூரம்... பிளஸ்-1 மாணவிகள் இருவரை சொகுசு விடுதியில் அடைத்து வைத்து 2 நாட்களாக பலாத்காரம்!

 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில், பிளஸ்-1 படித்து வரும் பள்ளி மாணவிகள் இருவரைத் தனியார் விடுதி அறையில் அடைத்து வைத்து, இரண்டு நாட்களாகக் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலமாக ஏற்பட்ட பழக்கம், இந்த விபரீதத்தில் முடிந்துள்ளது அண்டை மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூணாறு பகுதியில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில் தங்கி, அங்குள்ள பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் இரண்டு மாணவிகளுக்கு, இன்ஸ்டாகிராம்  செயலி மூலமாக இரண்டு இளைஞர்களின் அறிமுகம் கிடைத்துள்ளது. நாளடைவில் இவர்களின் பழக்கம் தீவிரமடைந்துள்ளது.

இதனைப் பயன்படுத்திக் கொண்ட அந்த வாலிபர்கள், மாணவிகள் இருவரையும் நேரில் சந்திக்க வருமாறு ஆசைவார்த்தை கூறி அழைத்துள்ளனர். இவர்களின் பேச்சை அப்படியே நம்பிய மாணவிகள், கடந்த ஜூன் 15-ஆம் தேதியன்று விடுதியிலிருந்து வெளியேறி, மூணாறில் உள்ள ஒரு தனியார் லாட்ஜுக்கு சென்று அந்த இளைஞர்களைச் சந்தித்துள்ளனர்.

லாட்ஜுக்கு வந்த மாணவிகள் இருவரையும், அந்த இளைஞர்கள் அங்குள்ள ஒரு தனி அறையில் வலுக்கட்டாயமாகப் பூட்டி வைத்துள்ளனர். தொடர்ந்து ஜூன் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்களாக, அந்த மாணவிகளுக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமைகளும், கடுமையான அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாகப் பள்ளிக்கும், தங்களின் தங்கும் விடுதிக்கும் வராமல் இருந்த மாணவிகள், நேற்று பலத்த சோர்வுடனும், மிகுந்த மன உளைச்சலுடனும் பள்ளிக்குத் திரும்பியுள்ளனர். மாணவிகளின் வழக்கத்திற்கு மாறான சோர்வைக் கண்டு சந்தேகமடைந்த பள்ளி ஆசிரியை, அவர்களைத் தனியாக அழைத்து அன்போடு விசாரித்துள்ளார். அப்போது, தங்களுக்கு நேர்ந்த கொடூரச் சம்பவத்தை அழுதுகொண்டே மாணவிகள் விவரித்துள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம், உடனடியாக இடுக்கி மாவட்டக் காவல் துறைக்குத் தகவல் அளித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மூணாறு போலீசார், பாதிக்கப்பட்ட மாணவிகளை மீட்டு மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாகப் போக்சோ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அந்த இரண்டு இன்ஸ்டாகிராம் வாலிபர்களையும்,  லாட்ஜ் நிர்வாகத்தையும் குறிவைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பள்ளி மாணவிகள் ஆன்லைன் பழக்கத்தால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் கேரளாவில் பலரையும் உலுக்கியுள்ளது.