தென்காசியில் கொடூரம்... திருமணமான 5 மாதங்களில் புதுப்பெண் வெட்டிக்கொலை!

 

தென்காசியில் குடும்பத் தகராறு காரணமாகத் திருமணமான ஐந்தே மாதங்களில் புதுப்பெண்ணைக் கணவரே அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மங்கம்மாள் சாலை சாஸ்தா கோவில் பகுதியைச் சேர்ந்த சக்தி வீரமணிகண்டன் (33) என்ற இருசக்கர வாகன மெக்கானிக்கும், அன்னலட்சுமி (23) என்பவரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.

திருமணம் முடிந்த முதல் வாரத்தில் இருந்தே இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அன்னலட்சுமி புகாரளித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் இருவருக்கும் கவுன்சிலிங் அளித்து அறிவுரை கூறியும் குடும்பப் பிரச்சினை தீரவில்லை.

வழக்கம்போல ஏற்பட்ட தகராறில் கடும் ஆத்திரமடைந்த சக்தி வீரமணிகண்டன், அரிவாளை எடுத்து மனைவியான அன்னலட்சுமியைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அன்னலட்சுமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.கொலை சம்பவத்திற்குப் பிறகு அங்கிருந்து தப்பிய சக்தி வீரமணிகண்டன், தென்காசி குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் சென்று சரணடைந்தார்.

அன்னலட்சுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கைப் பதிவு செய்த காவல்துறையினர், உயிரிழந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதோடு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.