தஞ்சையில் கொடூரம்... கள்ளக்காதல் ஆத்திரத்தில் அக்காவையும், கணவரையும் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற இளம்பெண்!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே, தனது கணவர் மற்றும் சொந்த அக்கா ஆகிய இருவர் மீதும் நள்ளிரவில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற வழக்கில் அமுதா என்ற பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம். இவருடைய மனைவி அமுதா. இந்த தம்பதியினருக்கு இடையே குடும்ப வாழ்க்கை சென்று கொண்டிருந்த சூழலில், அமுதாவின் சொந்த அக்காவான கண்ணம்மா என்பவருடன் சிதம்பரத்திற்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் கணவர் சிதம்பரத்திற்கும், அக்கா கண்ணம்மாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் அமுதாவிற்குத் தெரியவந்ததை அடுத்து, குடும்பத்திற்குள் அடிக்கடி கடுமையான வாக்குவாதங்களும் சண்டைகளும் ஏற்பட்டு வந்துள்ளன.
இந்நிலையில், கடந்த நேற்று முன்தினம் நள்ளிரவில் சிதம்பரம் மற்றும் கண்ணம்மா ஆகிய இருவரும் வீட்டில் இருந்த சமயம் பார்த்து, ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற அமுதா, அவர்கள் எதிர்பாராத நேரத்தில் இருவர் மீதும் பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துள்ளார்.
தீ உடல் முழுவதும் பரவி இருவரும் அலறிய சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிதம்பரமும் கண்ணம்மாவும், உடல் கருகிய நிலையில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தீ வைப்புச் சம்பவத்தின் போது அமுதாவின் கைகளிலும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பேராவூரணி போலீசார், காயமடைந்த அமுதாவைத் தங்களது கண்காணிப்பில் கொண்டு வந்து முறைப்படி கைது செய்துள்ளனர். அவரிடம் இந்த கொடூரக் கொலைச் சம்பவத்தின் பின்னணி குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.