விழுப்புரத்தில் கொடூரம்... மணல் கடத்தலை தடுக்கச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் மீது கொடூரமாக தாக்குதல்!
மணல் கடத்தல் தொடர்பான வழக்கில் குற்றவாளியை கைது செய்யச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் மீது திருப்புளியால் தாக்கி கொலை செய்ய முயன்ற சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
தென்பெண்ணையாற்றின் கரையோரப் பகுதிகளில் சட்டவிரோத மணல் கடத்தல் அடிக்கடி நடைபெற்று வருவது குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். கடந்த மாதம் பிடாகம் பகுதியை சேர்ந்த சுதாகர் (31) என்ற நபர் மீது மணல் கடத்தல் வழக்கில் வாகனப் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் தேடப்பட்டு வந்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12.45 மணியளவில் உதவி ஆய்வாளர் குணசேகர், சுதாகர் வசிக்கும் குச்சிப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவுக்கு சென்று அவரை கைது செய்ய முயன்றார். முதலில் கதவை பூட்டிக் கொண்டு வெளியே வர மறுத்த சுதாகர், எச்சரிக்கைக்கு பிறகு வெளியில் வந்தார். அச்சமயம் சுதாகர், அவரது தம்பி பாலாஜி (28), மனைவி பிரபாவதி (26), தந்தை தட்சிணாமூர்த்தி (65), தாய் தமிழரசி (60) ஆகியோர் சேர்ந்து உதவி ஆய்வாளர் குணசேகரை திட்டி, பணியை தடுக்க முயன்றனர்.
இதில் ஆத்திரமடைந்த சுதாகர், அருகில் கிடந்த திருப்புளியை எடுத்து குணசேகரின் முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் குத்தி கொலை செய்ய முயன்றார். தாக்குதலின்போது குணசேகர் வைத்திருந்த வாக்கி-டாக்கியையும் எடுத்துக்கொண்டு அனைவரும் தப்பிச் சென்றனர்.
காயமடைந்த உதவி ஆய்வாளர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் மருத்துவமனைக்கு சென்று குணசேகரை சந்தித்து நலம் விசாரித்தார்.
இதுகுறித்து சுதாகர், பாலாஜி, பிரபாவதி, தட்சிணாமூர்த்தி, தமிழரசி உள்ளிட்ட ஐந்து பேர்மீது அரசுப் பணியைத் தடுக்கல், தகாத வார்த்தைகளால் திட்டல், திருட்டு, கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் பிரபாவதி கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள சுதாகர் உள்ளிட்ட 4 பேரை பிடிக்க மாவட்ட எஸ்பி இரு தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!