படப்பிடிப்புத் தளத்தில் பயங்கரம்... சடலமாகக் கிடந்த ஒளிப்பதிவாளர்! 

 

கேரளத் திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்த ஜாபர் (51), திருச்சூர் அருகே மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலப்புரம் மாவட்டம் சங்கரன்குளம் பகுதியைச் சேர்ந்த இவர், புதிய படம் ஒன்றின் படப்பிடிப்புக்காகக் கொடுங்கல்லூர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் படக்குழுவினருடன் தங்கியிருந்தார். நேற்று ஜாபர் கழிப்பறைக்குச் சென்ற நிலையில், நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த படக்குழுவினர், கழிப்பறைக் கதவைத் தட்டியும் பதில் வராததால், கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது ஜாபர் அங்கே சடலமாகக் கிடப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். உடனடியாகக் கொடுங்கல்லூர் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஜாபரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜாபர் தங்கியிருந்த அறையில் ஏதேனும் மர்ம நபர்கள் வந்து சென்றார்களா? அல்லது அவருக்கு ஏதேனும் உடல்நலக் கோளாறு இருந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். படப்பிடிப்புத் தளத்தில் சக ஊழியர்களுடன் உற்சாகமாக இருந்த ஒளிப்பதிவாளர், திடீரென கழிப்பறையில் சடலமாக மீட்கப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இது தற்கொலையா, விபத்தா அல்லது கொலையா என்பது தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.