மதுராந்தகத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம்... முதல்வர் விஜய் ரோடு ஷோ... எந்தெந்த பாதையில் வாக்கு சேகரிப்பு -  முழு விபரம்!

 

தமிழகத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. வரும் அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரப் பயணம் தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராகப் போட்டியிடும் மரகதம் குமரவேலை ஆதரித்து, முதல்வர் விஜய் நேரில் கலந்துகொண்டு பிரம்மாண்டமான வாகனப் பேரணியை நடத்தி வாக்கு சேகரிக்கிறார். 

மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவு திரட்டுவதற்காகச் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் அப்பகுதியில் திரண்டிருந்தனர். மாமண்டூர் பகுதியில் இருந்து தனது தேர்தல் பிரச்சார ரோடு ஷோவை தொடங்கினார்.

மாமண்டூரில் தொடங்கி மதுராந்தகம் வரை சுமார் 25 கிராமங்கள் வழியாகச் செல்லும் பிரதான சாலைகளில் திறந்த வெளி வாகனத்தில் நின்றவாறு அவர் பொதுமக்களைச் சந்திக்கிறார்.  

சமீபத்தில் அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கும் தவெகவுக்கு, இந்த மதுராந்தகம் இடைத்தேர்தல் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கட்சியின் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் முதலமைச்சர் விஜயின் இந்தப் பிரச்சாரப் பயணம் அமைந்துள்ளதுடன், மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் தீவிர வாக்கு சேகரிப்பும் நடத்தப்பட்டு வருகிறது. தலைவர்களின் அதிரடிப் பிரச்சாரத்தால் மதுராந்தகம் தேர்தல் களம் தற்பொழுது சூடுபிடித்துள்ளது.