அமெரிக்க ராணுவத்திற்கு ரூ.111 லட்சம் கோடி பிரமாண்ட பட்ஜெட் - பிரதிநிதிகள் சபை ஒப்புதல்!

 

உலகளாவிய போர்ச் சூழல்கள் மற்றும் எல்லைப் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்க ராணுவத்துக்கான 2027-ஆம் நிதியாண்டின் தேசியப் பாதுகாப்பு அனுமதி மசோதாவிற்கு அமெரிக்கக் நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்கப் பாதுகாப்புத் துறை வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த பிரமாண்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2027-ஆம் நிதியாண்டுக்கான பாதுகாப்பு மசோதாவில் 1.15 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 111 லட்சம் கோடி) நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதிநிதிகள் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 216 - 212 என்ற வாக்கக் கணக்கில் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இந்த பிரமாண்டமான பட்ஜெட் நிதி பின்வரும் துறைசார்ந்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்புத் தொழில்சார் உற்பத்தி கட்டமைப்பை வலுப்படுத்துதல், வெடிமருந்து இருப்புக்களை அதிகரித்தல் மற்றும் கப்பல் கட்டும் பணிகளை நவீனப்படுத்துதல். புதிய தலைமுறை ட்ரோன் எதிர்ப்புப் பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குதல்.

அமெரிக்க ராணுவ வீரர்களின் பணி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு 5% முதல் 7% வரை ஊதிய உயர்வு வழங்குதல். உலகெங்கிலும் பல்வேறு போர்கள் மற்றும் மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த அதிரடி ராணுவ நிதி ஒதுக்கீடு சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.