தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை கடும் உயர்வு... புதிய வீடுகளின் பட்ஜெட் எகிறுகிறது!
தமிழகத்தில் சொந்த வீடு கட்டக் கனவு கண்டு வரும் சாமானிய மக்களுக்குப் பேரிடியாக, ஜல்லி மற்றும் எம்.சாண்ட் உள்ளிட்ட முக்கியக் கட்டுமானப் பொருட்களின் விலை தற்பொழுது அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் எரிபொருள் விலை உயர்வே இந்தத் திடீர் விலையேற்றத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
மேற்காசிய நாடுகளில் தற்பொழுது நிலவி வரும் தீவிரப் போர் சூழல் காரணமாக, வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருட்கள் வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக உள்நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த டீசல் விலை உயர்வு மற்றும் தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ள குவாரிகளின் எண்ணிக்கை குறைந்து போனது ஆகிய காரணங்களால், கட்டுமானப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்து, தற்பொழுது அவற்றின் விற்பனை விலை மளமளவென ஏறியுள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஜல்லி, எம்.சாண்ட் மற்றும் பி.சாண்ட் ஆகியவற்றின் விலை யூனிட்டுக்குச் சுமார் 500 ரூபாய் வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை ஒரு யூனிட் 3,300 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த ஜல்லி, 500 ரூபாய் உயர்ந்து 3,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு யூனிட் 4,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட எம்.சாண்ட் தற்பொழுது 4,500 ரூபாயாகவும், ஒரு யூனிட் 5,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட பூச்சு வேலைக்கான பி.சாண்ட் 5,500 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றத்தின் அளவானது மாவட்டங்களைப் பொறுத்து சற்று மாறுதலுக்கு உட்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு காரணமாகப் பெரிய அளவில் கட்டடங்களை நிர்மாணிக்கும் கட்டுமான டெவலப்பர்களுக்குக் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், தங்களின் வாழ்நாள் சேமிப்பை வைத்துத் தனியாகப் புதிய வீடுகளைக் கட்டி வரும் நடுத்தரக் குடும்பங்கள் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். தங்கம் விலை தொடர்ந்து சரிந்து இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியளித்து வரும் வேளையில், மறுபுறம் வீடு கட்டும் பொருட்களின் விலை உயர்ந்து வருவது சாமானியர்களைக் கவலையடையச் செய்துள்ளது. எனவே, இந்தத் தன்னிச்சையான விலை உயர்வைத் தடுத்து நிறுத்தத் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.