இல்லத்தரசிகள் அதிர்ச்சி... பூண்டு விலை கிலோ ரூ.360 வரை உயர்வு!

 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகக் காய்கறிச் சந்தைகளில் பூண்டு வரத்து கடுமாகக் குறைந்துள்ளதால், அதன் விலை நாளுக்கு நாள் விண்ணைத் தொட்டு வருகிறது. இதனால் அன்றாட சமையலுக்குப் பூண்டைப் பயன்படுத்தும் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சியும் சிரமமும் அடைந்துள்ளனர். சந்தைகளில் பூண்டு வரத்து குறைந்ததே இந்தத் திடீர் விலையேற்றத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த வாரம் ஒரு கிலோ பூண்டு ரகத்திற்கு ஏற்ப ரூ. 160 முதல் ரூ. 250 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. வரத்துக் குறைவால் மொத்த விற்பனைச் சந்தைகளில் தற்போது ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300 முதல் ரூ. 350 வரை உயர்ந்துள்ளது. மொத்த விற்பனையைத் தாண்டி சில்லறை விற்பனைக் கடைகளில் பூண்டு விலை மேலும் அதிகரித்துள்ளது. அக்கம் பக்கத்திலுள்ள காய்கறிக் கடைகள் மற்றும் சில்லறை விற்பனையகங்களில் ஒரு கிலோ பூண்டு ரூ. 310 முதல் ரூ. 360 வரை விற்கப்படுகிறது.

விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளதால், கிலோ கணக்கில் பூண்டு வாங்குவதைத் தவிர்த்து, இல்லத்தரசிகளும் பொதுமக்களும் வேறு வழியின்றி ரூ. 50 மற்றும் ரூ. 100-க்குக் குறைந்த அளவில் சிறு பாக்கெட்டுகளாக வாங்கிச் செல்கின்றனர்.