சவுதி அரேபியாவை குறிவைத்து ஹவுதி படைகள் ஏவுகணை தாக்குதல்! ரியாத், ஜிசான் பகுதிகளில் பதற்றம்
ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சிப் படைகள், சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாகத் தெரிவித்துள்ளன. இதனால் ரியாத் உள்ளிட்ட பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 18-ம் தேதி ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மற்றும் நிதி மையத்தை ஏராளமான குரூஸ் ஏவுகணைகள் மூலம் குறிவைத்ததாக ஹவுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சரீ தெரிவித்தார். மேலும், ஜிசான் பகுதியில் உள்ள இலக்கு மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளையும், காமிஸ் முஷைத் விமானப்படைத் தளம் மீது ட்ரோன் தாக்குதலையும் நடத்தியதாகக் கூறினார்.
இதற்கிடையே, சவுதி தலைமையிலான கூட்டணிப் படைகள் ரியாத் நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையை இடைமறித்து அழித்ததாக அறிவித்தன. தெற்குப் பகுதியில் ஏவப்பட்ட 4 பாலிஸ்டிக் ஏவுகணைகளும் இடைமறிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஏவுகணைச் சிதறல்கள் விழுந்ததில் ரியாத்தின் நிதி மையப் பகுதியில் கட்டிடச் சேதம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜிசான் உள்ளிட்ட தெற்குப் பகுதிகளிலும் பாதுகாப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. இரு தரப்புக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருவதால், அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.