பூசாரி பரமசிவம் உயிரிழந்தது எப்படி? - காவல்துறை விளக்கம்!

 

காவல்துறை விசாரணையில் ஜோதிடரும் கோயில் பூசாரியுமான பரமசிவம் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவரது மரணம் குறித்த உண்மை நிலவரத்தைத் தெளிவுபடுத்தி மதுரை மாநகர காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த ஜோதிடர் பரமசிவத்திற்கும், அதே பகுதியைச் சேர்ந்த மாலதி - பாலகிருஷ்ணன் தம்பதியினருக்கும் இடையே கடந்த ஜூலை 17-ஆம் தேதி இரவு தகராறு ஏற்பட்டுத் தாக்கிக்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ஜூலை 23-ஆம் தேதி இரு தரப்பினரையும் கைது செய்து, பின்னர் காவல் நிலையப் பிணையில் விடுவித்தனர். பரமசிவம் ஜூலை 24-ல் தனது வீட்டில் கீழே விழுந்து தலையில் அடிபட்டதாகக் கூறி ஆகஸ்ட் 5-ல் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார். அங்குச் சென்று விசாரித்த காவல்துறையினரிடம், "நான் தவறித்தான் கீழே விழுந்தேன், காவல்துறை நடவடிக்கை தேவையில்லை" எனக் கூறியதால், அப்போதைய தலைமைக் காவலர் அதனைப் பொதுநாள் குறிப்பில் பதிவு செய்தார்.

மருத்துவர்கள் தலைப் காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்ய வலியுறுத்தியும், அதை ஏற்க மறுத்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி பரமசிவம் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார். பின்னர் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திடீரென மயக்கம் அடைந்ததால், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது.

சிந்தாமணி காவல் நிலைய ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் இரு காவலர்கள் தாக்கியதால்தான் தனது கணவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது எனக் கூறி, பரமசிவத்தின் மனைவி அய்யம்மாள் ஆகஸ்ட் 15-ஆம் தேதி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இதனிடையே, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையிலிருந்த பரமசிவம் ஆகஸ்ட் 16-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து மேலூர் கோட்டாட்சியர் சங்கீதா முதற்கட்ட விசாரணை நடத்தினார். ஆகஸ்ட் 17-ல் உடற்கூராய்வுக்கு குடும்பத்தினர் ஒத்துழைக்காமல் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி மதுரை 5-வது நீதிமன்ற நடுவர் விசாரணை நடத்தினார். நீதிமன்ற நடுவரின் விசாரணை அறிக்கை பெறப்பட்டவுடன், அதன் அடிப்படையில் அடுத்தகட்டச் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மதுரை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.