'ஜெயிலர் 2' முதல் சிங்கிள் எப்படியிருக்கு? ‘அலே போலெலோ’ - அனிருத்தின் துள்ளல் இசையில் அசத்தும் பாடல்!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் முதல் பாடலான ‘அலே போலெலோ’ பாடல் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
அனிருத் இசையமைத்துப் பாடியுள்ள இப்பாடல், துள்ளலான குரலிலும் பின்னணி இசையிலும் கேட்கும் அனைவரையும் ஆடவைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அருண்ராஜா காமராஜ் இப்பாடலுக்கு வரிகளை எழுதியுள்ளார்.
கேரளப் பாரம்பரிய பின்னணி அரங்க அமைப்பில், வெள்ளைப் புடவை அணிந்து நடிகை பூர்ணா (ஷாம்னா காசிம்) ஆடும் சிறப்பான நடனம் பாடலுக்கு மேலும் எழில் சேர்க்கிறது. இந்த குத்தாட்டப் பாடலில் ரஜினிகாந்த் நேரடியாக நடனமாடாமல், ஏதோ ஒரு ரகசியத்தைத் தேடி வந்தவர் போலத் தனது தனித்துவமான ஸ்டைலில் வேடிக்கை பார்க்கும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மோகன்லால் மற்றும் சிவ ராஜ்குமார் கௌரவத் தோற்றத்தில் தோன்றுகின்றனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படம் அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.