தமிழகத்தின் பல மாவட்டங்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில்திடீர் சோதனை - சிக்கியது எவ்வளவு?
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று ஒரே நேரத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஆவணப் பதிவுகளுக்குப் பொதுமக்கள் மற்றும் புரோக்கர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கப்படுவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இன்று மதியத்திற்கு மேல் லஞ்ச ஒழிப்புத் துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில், தனிப்படை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு, குறிப்பிட்ட சார்பதிவாளர் அலுவலகங்களுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனைகளை மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் அடுத்த சூளகிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென நுழைந்து கதவுகளைப் பூட்டி சோதனையிட்டனர். அங்கு சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்தத் தீவிர சோதனை நீடித்தது. அதே போன்று வேலூர் மாவட்டத்தில் வேலப்பாடி பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திலும் இன்று மாலை லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாகப் புகுந்து சோதனைகளை மேற்கொண்டனர்.
இதேபோல் திருப்பத்தூர் மற்றும் தேனி மாவட்டத்தின் போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இந்தத் திடீர் சோதனைகள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. சார்பதிவாளர் அலுவலகங்களில் நிலப்பத்திரப் பதிவு, திருமணப் பதிவு மற்றும் ஆவணப் சான்றுகள் வழங்குவதற்குப் பெரும் தொகையைச் சார்பதிவாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் லஞ்சமாகப் பெற்று வருவதாகப் பொதுமக்கள் தரப்பில் இருந்து தொடர் புகார்கள் அரசுக்குச் சென்ற வண்ணம் இருந்தன.
இன்றைய சோதனையின் போது, அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த புரோக்கர்கள் எவரும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்களது மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும், கணக்கில் வராத ரொக்கப் பணம் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும், முக்கிய ஆவணங்கள் குறித்தும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். இந்தச் சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட லஞ்சப் பணம் மற்றும் அதிகாரிகள் மீதான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.