சொந்த தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை தமிழக அரசு மானியம் - எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரங்கள்!
புதிய தொழில்களைத் தொடங்கிட விரும்பும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்குத் தமிழக அரசு பல்வேறு நிதி உதவிகளையும் மானியங்களையும் வழங்கி வருகிறது. அந்த வகையில், தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் திட்டத்தின் முக்கிய விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்துப் பார்க்கலாம். புதிய தொழில்களைத் தொடங்கத் தகுதியான இளைஞர்களுக்குக் குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை வங்கிகள் வாயிலாகக் கடனுதவி வழங்கப்படுகிறது. திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை தமிழக அரசு நேரடி மானியமாக வழங்குகிறது.
மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினருக்குப் பொது மானியத்துடன் கூடுதலாக 10 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும், வங்கிக் கடனுக்கான வட்டி விகிதத்தில் 3 சதவீதம் வட்டியை அரசே ஏற்கும் வட்டி மானியமும் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
பொதுப்பிரிவினருக்கு 45 வயது வரையிலும்; பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு 55 வயது வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மத்திய, மாநில அரசுத் திட்டங்களின் கீழ் மானியத்துடன் கடன் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது. நேரடி விவசாயம் சார்ந்த தொழில்களைத் தவிர்த்து, உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த அனைத்துத் தொழில்களுக்கும் இக்கடனுதவி பொருந்தும்.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்த பிறகு, விண்ணப்பத்தின் அச்சு நகல் மற்றும் தேவையான கல்வி, இருப்பிடம், சாதிச் சான்றிதழ்களின் நகல்களுடன் மாவட்ட தொழில் மையத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ அனுப்பி வைக்க வேண்டும்.