நாளை வெளியாகிறது நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் - டவுன்லோடு செய்வது எப்படி?! - 28 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

 

மருத்துவப் படிப்புக்கான கனவுடன் காத்திருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் (MBBS, BDS, AYUSH) மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் (NEET UG 2026) நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட், நாளை ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. தேசியத் தேர்வு முகமை (NTA) இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

தேர்வு நாள்: மே 3, 2026 (ஞாயிற்றுக்கிழமை). தேர்வு நேரம்: மதியம் 2:00 மணி முதல் மாலை 5:20 மணி வரை. இந்தியா முழுவதும் சுமார் 28 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி?

தேசியத் தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in என்ற பக்கத்திற்குச் செல்லவும். முகப்புப் பக்கத்தில் உள்ள 'Candidate Activity' பகுதியில் 'NEET UG 2026 Admit Card' என்ற லிங்க்கை கிளிக் செய்யவும். உங்கள் விண்ணப்ப எண் (Application Number), பிறந்த தேதி (Date of Birth) மற்றும் பாதுகாப்பு குறியீட்டைப் (Security Pin) பதிவிடவும். இப்போது உங்கள் ஹால் டிக்கெட் திரையில் தோன்றும். அதைத் தரவிறக்கம் செய்து 3 அல்லது 4 பிரதிகள் (Printouts) எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஏற்கனவே தேர்வு எழுதப்போகும் நகரம் குறித்த தகவல் கடந்த ஏப்ரல் 12-ம் தேதியே வெளியிடப்பட்டது. ஆனால், நாளை வெளியாகும் ஹால் டிக்கெட்டில் தான் உங்கள் தேர்வு மையம், முகவரி மற்றும் தேர்வு அறைக்குள் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிமுறைகள் இடம் பெற்றிருக்கும். தேர்வு மையத்திற்குச் செல்லும் போது ஹால் டிக்கெட்டுடன், ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை (ஆதார், வாக்காளர் அட்டை போன்றவை) எடுத்துச் செல்வது கட்டாயமாகும்.

மாணவர்கள் கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்க, ஹால் டிக்கெட் வெளியான உடனேயே தரவிறக்கம் செய்து விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.