ஆன்லைன் மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி? புதிய இணையதள வசதி.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

 

இணையவழி மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) ஒரு மிக முக்கியமான வசதியைத் தொடங்கியுள்ளது.

இந்த வசதியைப் பயன்படுத்துவது எப்படி?
முதலில் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான cybercrime.gov.in என்ற தளத்திற்குச் செல்லவும். முகப்புப் பக்கத்தில் உள்ள 'Check Suspect' அல்லது 'Suspect Search' என்ற பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.

அங்கு உங்களைத் தொடர்பு கொண்ட நபரின் மொபைல் எண், UPI ஐடி, வங்கி கணக்கு எண் , அல்லது மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை உள்ளிடவும். தேடுதல் முடிவில், அந்த விபரங்கள் ஏற்கனவே ஏதேனும் சைபர் குற்றப் புகார்களில் சிக்கியுள்ளதா என்பது திரையில் தோன்றும்.

சக்ஷு போர்டல் மத்திய தகவல் தொடர்புத் துறையின் ஒரு முயற்சியாகும். சந்தேகத்திற்கிடமான அழைப்புகள், குறுஞ்செய்திகள் அல்லது வாட்ஸ்அப் செய்திகளைப் பொதுமக்கள் இதில் நேரடியாகப் புகாரளிக்கலாம்.

நீங்கள் ஆன்லைன் மூலம் பணத்தை இழந்துவிட்டால், உடனடியாக 1930 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். முதல் 1 அல்லது 2 மணிநேரத்திற்குள் புகார் அளித்தால், உங்கள் பணம் மோசடி நபரின் கணக்கிலிருந்து முடக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

2026 ஜனவரி வரையில், சுமார் 12.94 லட்சம் போலி சிம் கார்டுகள் மற்றும் 3.03 லட்சம் ஐஎம்இஐ எண்கள் அரசு சார்பில் முடக்கப்பட்டுள்ளன.

"யாராவது உங்களுக்குத் தெரியாத நபர், அதிக லாபம் தருவதாகக் கூறி முதலீடு செய்யச் சொன்னாலோ அல்லது உங்கள் வங்கித் தகவல்களைக் கேட்டாலோ, உடனே இந்தப் போர்ட்டலில் சரிபார்க்கவும். 'டிஜிட்டல் அரெஸ்ட்' போன்ற மிரட்டல்களுக்குப் பயப்படாமல் சைபர் போலீசாரைத் தொடர்பு கொள்ளவும்."