“எப்படி இருந்த நான்?” நாட்டாமை இப்படி மாறிட்டாரே..?! பாஜகவில் பொறுப்பு கேட்டு நயினார் நாகேந்திரனிடம் சரத்குமார் கடிதம்!

 

கடந்த 2024-ம் ஆண்டு தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை (ஏ.ஐ.எஸ்.எம்.கே) பாஜகவுடன் இணைத்த நடிகர் சரத்குமார், தற்போது தேர்தல் நேரத்தில் தனக்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் சரத்குமார் அவசர ஆலோசனை நடத்தினார்.

அப்போது, "தேசிய அளவில் பெரிய பொறுப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சாதாரண உறுப்பினராகவே நடத்தப்படுகிறோம். பாஜகவில் உரிய அங்கீகாரம் கிடைக்காவிட்டால், மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கித் தனித்துப் போட்டியிட வேண்டும்." சரத்குமாருக்குப் பொறுப்பு வழங்காவிட்டால், தாங்கள் வகிக்கும் பதவிகளை ராஜினாமா செய்யத் தயார் எனவும் ஆதரவாளர்கள் ஆவேசமாகத் தெரிவித்தனர்.

ஆலோசனைக்கு பிறகு பேசிய சரத்குமார், "பிரதமர் மோடி மீது கொண்ட பற்றால் மட்டுமே பாஜகவில் இணைந்தேன். ஆனால், எந்தப் பொறுப்பும் இல்லாமல் தேர்தல் களத்தில் எப்படிச் செயல்படுவது என்று தெரியவில்லை. தேர்தலுக்கு முன்பு உரியப் பொறுப்புகள் வருவது அவசியம்" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனைச் சந்தித்த சரத்குமார், தனது கோரிக்கைகளை அடங்கிய கடிதத்தை வழங்கினார். தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்துள்ள நிலையில், இந்தக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது. பாஜகவின் முடிவைப் பொறுத்தே அவர்களுக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்வது குறித்து இறுதி முடிவு எடுப்பேன்," என்று சரத்குமார் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

சரத்குமாரின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக நயினார் நாகேந்திரன் உறுதியளித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், சரத்குமார் போன்ற ஒரு நட்சத்திரப் பேச்சாளரைத் தக்கவைத்துக் கொள்ள பாஜக தலைமை அவருக்கு முக்கியப் பொறுப்பை வழங்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.