undefined

மைலேஜ் எப்படியிருக்கும்? நாடு முழுவதும் ஏப்.1 முதல் E20 பெட்ரோல் கட்டாயம் - மத்திய அரசு உத்தரவு! 

 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இறக்குமதிச் செலவைக் குறைக்கும் நோக்கில், இந்திய எரிசக்தி துறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் 'E20' ரக பெட்ரோல் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சோதனை அடிப்படையில் ஒருசில பெட்ரோல் நிலையங்களில் மட்டும் வழங்கப்பட்டு வந்த E20 பெட்ரோல், இனி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் கட்டாயமாக்கப்பட உள்ளது.

தற்போது நாம் பயன்படுத்தும் சாதாரண பெட்ரோலில் (E5) சுமார் 5% வரை மட்டுமே எத்தனால் கலக்கப்படுகிறது. ஆனால், புதிய E20 எரிபொருள் என்பது 20% எத்தனால் (Ethanol) கலக்கப்படுகின்றது. எத்தனால் என்பது கரும்புச் சர்க்கரை ஆலைக்கழிவுகள் மற்றும் தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் உயிரி எரிபொருள். 80% பெட்ரோல் வழக்கமான முறையில் கச்சா எண்ணெயிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல்.

இந்த மாற்றத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏற்படும். வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையின் அளவு கணிசமாகக் குறையும், இது காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த உதவும். கச்சா எண்ணெய் இறக்குமதிக்காகச் செலவிடப்படும் கோடிக்கணக்கான அந்நியச் செலாவணி சேமிக்கப்படும்.

எத்தனால் தயாரிக்கத் தேவையான கரும்பு மற்றும் தானியங்களை வழங்கும் விவசாயிகளுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்க வழிவகுக்கும். அதே சமயம்  புதிய E20 பெட்ரோல் சில சவால்களையும் கொண்டுள்ளது. சாதாரண பெட்ரோலை விட எத்தனால் கலந்த பெட்ரோல் குறைந்த ஆற்றல் கொண்டது. இதனால் வாகனங்களின் மைலேஜ் 2% முதல் 6% வரை குறைய வாய்ப்புள்ளது.

2023-க்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய வாகனங்களின் இன்ஜின்கள் அதிக எத்தனால் கலப்பிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படவில்லை. இதனால் நீண்ட காலப் பயன்பாட்டில் இன்ஜின் பாகங்கள் பாதிக்கப்படலாம். இருப்பினும், தற்போதைய புதிய வாகனங்கள் அனைத்தும் 'E20 Ready' தொழில்நுட்பத்துடன் வருகின்றன. ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் இந்தத் திட்டம், இந்தியாவின் பசுமை எரிசக்தி இலக்குகளை அடைவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.