நூலிழையில் உயிர்தப்பிய நூற்றுக்கணக்கான பயணிகள்... ஒரே ஓடுதளத்தில் நேருக்கு நேர் வந்த 2 ஏர் இந்தியா விமானங்கள்!
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில், ஒரே ஓடுதளத்தில் இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் மிக நெருக்கமாக நேருக்கு நேர் வந்ததால், நொடிப்பொழுதில் மிகப்பெரிய விமான விபத்து நேரிடும் அபாயகரமான சூழ்நிலை உருவானது. விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையின் துரிதமான செயல்பாட்டால் நூற்றுக்கணக்கான பயணிகள் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று, நேற்று முன்தினம் இரவு மும்பை விமான நிலையத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. சிலிகுரியில் இருந்து வந்து தரையிறங்கிய அந்த விமானம், ஓடுதளத்தை விட்டு முழுமையாக வெளியேறிப் பாதுகாப்பான பகுதிக்கு நகர்வதில் எதிர்பாராத விதமாகச் சற்று தாமதம் ஏற்பட்டது.
அதே நேரத்தில், மும்பையில் இருந்து டெல்லிக்கு புறப்படுவதற்காக ஏர் இந்தியா நிறுவனத்தின் பிரம்மாண்ட 'போயிங் 777' விமானம், அதே ஓடுதளத்தில் வேகமாக ஓடத் தொடங்கியது. முன்னால் சென்ற விமானம் இன்னும் ஓடுதளத்தை விட்டு நகரவில்லை என்பதை அறியாமல், டெல்லி விமானம் அதிவேகமாகப் டேக்-ஆஃப் ஆகத் தயாரானதால் இரு விமானங்களும் நேருக்கு நேர் மோதும் பயங்கரச் சூழல் ஏற்பட்டது.
ஒரே ஓடுதளத்தில் இரண்டு விமானங்கள் மிக நெருக்கமாக விபத்தை நோக்கிச் செல்வதைக் கண்ட விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஏடிசி அதிகாரிகள், உடனடியாக டெல்லி செல்லவிருந்த ஏர் இந்தியா போயிங் விமானத்தின் விமானிகளுக்குப் "புறப்பாட்டை உடனே நிறுத்துங்கள்" என்று அவசரக் கால வயர்லெஸ் உத்தரவைப் பிறப்பித்தனர்.
கட்டுப்பாட்டு அறையின் இந்த அவசர எச்சரிக்கையைத் தொடர்ந்து, டெல்லி விமானத்தின் முதன்மை விமானி நொடிப் பொழுதில் சாதுரியமாகச் செயல்பட்டு, விமானத்தின் பிரேக்குகளை இயக்கி அதன் வேகத்தைக் குறைத்து ஓடுதளத்திலேயே பாதுகாப்பாக நிறுத்தினார். இதனால் இரு விமானங்களிலும் இருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் எவ்வித காயமுமின்றி நல்வாய்ப்பாகப் உயிர் தப்பினர்.
ஏற்கனவே ஒரு விமானம் ஓடுதளத்தை விட்டு வெளியேறாமல் நின்று கொண்டிருக்கும் போதே, டெல்லி செல்லும் மற்றொரு விமானத்திற்குப் புறப்பட அனுமதி வழங்கப்பட்டது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்வளவு பெரிய பாதுகாப்புச் சறுக்கல் குறித்து மும்பை விமான நிலைய அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கங்கள் எதையும் அளிக்கவில்லை.
இருப்பினும், இந்த விபத்து அபாயம் மற்றும் கடுமையான பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இச்சம்பவத்தின் போது கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்த அதிகாரிகள் யார்? தவறு ஏடிசி தரப்பில் நடந்ததா அல்லது விமானிகளின் புரிதலில் குளறுபடி ஏற்பட்டதா? என்பது குறித்து ஏர்போர்ட் போலீசார் மற்றும் விமானப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.