பயங்கரம்: அரசு பேருந்து-பைக் மோதி வடமாநில இளைஞர்கள் 2 பேர் பலி!

 

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோவில் அருகே அவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் பைக்கில் பயணம் செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா (22) மற்றும் தில்சூல் (21) ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிர் இழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பாத்துரை போலீசார், பலியானவர்களின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அரசு பேருந்து ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வேலை தேடித் தமிழகம் வந்த வடமாநில இளைஞர்கள் சாலை விபத்தில் பலியான சம்பவம் அவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.