மனைவியைக் கொன்று கணவர் தற்கொலை... வீடியோ எடுத்து மாமனார், மாமியாருக்கு அனுப்பிய கொடூரம்!
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவில் மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவரைக் கொலை செய்து வீடியோ எடுத்த கணவர், பின்னர் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகாவைச் சேர்ந்த ரகு (41) என்பவர் சிக்கமகளூருவில் சொந்தமாகப் பேக்கரி நடத்தி வந்தார். இவருக்கும் ககனா (38) என்பவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக மனைவி ககனாவின் நடத்தையில் ரகுவுக்குச் சந்தேகம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மனைவியுடன் காரில் சொந்த ஊருக்குச் சென்ற ரகு, வழியிலேயே ககனாவுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை காரிலேயே வைத்து கொலை செய்துள்ளார். மேலும், அக்கொடூரத்தைச் தனது செல்போனிலும் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.
மாலை 6.30 மணியளவில் தனது மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களுக்குச் செல்போன் மூலம் வீடியோ கால் செய்த ரகு, மனைவியைக் கொன்று விட்டதாகக் கூறி, மனைவி கொலை செய்யப்படும் வீடியோவையும் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்.
ரகுவின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து அவரைத் தேடியபோது, கேசகோடு கிராம எல்லையில் சாலையோர மரத்தில் அவர் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்து வந்த அரேஹள்ளி காவல்துறையினர் ரகுவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ககனாவின் உடலை அருகில் உள்ள யகட்டி கால்வாயில் ரகு வீசியிருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். மீட்புப் படையினரின் உதவியுடன் உடலைத் தீவிரமாகத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ரகு தற்கொலைக்கு முன் பேசிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.