13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முன்னாள் ஊராட்சி தலைவரின் கணவர் போக்சோவில் கைது!
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே 13 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரைப் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியின் தாயார், அவரை அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.
அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பதைக் கண்டறிந்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்துப் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்ததுடன், மேல் சிகிச்சைக்காகத் தஞ்சாவூர் அரசு ராசாமிராசுதாரர் மருத்துவமனைக்குச் சிறுமியை அனுப்பி வைத்தனர். தற்போது அங்கு சிறுமிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணை மற்றும் அடையாளம்: இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில், ஒக்கநாடு மேலையூர் ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராவின் கணவர் ரவிச்சந்திரன் (56) என்பவர், சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததும், அதனால் சிறுமி கர்ப்பமடைந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, ரவிச்சந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.