குடும்பத் தகராறில் மனைவியைக் குத்திக் கொன்ற கணவன்.. தப்பியோடியவரைத் தேடும் போலீசார்!

 

தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறில், கணவன் மனைவியைக் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவான கணவனைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த சிங்கத்துரை (47) என்பவருக்கும், அவரது மனைவி பிரியங்கா (35) என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாகக் குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இரவு 11 மணிக்கு மேல் வீடு தாமதமாகத் திரும்பிய பிரியங்காவிடம் சிங்கத்துரை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சிங்கத்துரை, மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரியங்காவைக் கண்மூடித்தனமாகக் குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடலூர் வடக்கு காவல்துறையினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரியங்காவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கூடலூர் வடக்கு போலீசார், தலைமறைவான சிங்கத்துரையைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.