மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன்... 2 மகள்களுடன் காவல் நிலையத்தில் சரண்!
மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்ற கணவன், தனது 2 மகள்களையும் அழைத்துக் கொண்டு காவல் நிலையத்தில் சரணடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனது இளம் மனைவியை, கணவன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வுபெற்ற ரயில்வே லோகோ பைலட்டான கணவன், தனது மனைவியைக் கொலை செய்த பின்னர், தனது இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு அருகிலுள்ள காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
பீகாரைச் சேர்ந்த தசரத் மண்டல் (55) என்பவருக்கும், அவரது மனைவி பூஜா தேவி (28) என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தசரத், பூஜாவைக் கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவியைக் கொலை செய்த பின்னர், தசரத் மண்டல் தனது இரு மகள்களையும் அழைத்துக் கொண்டு காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, பூஜா தேவியின் சகோதரர் தனது சகோதரியின் மரணத்துக்கு வரதட்சணைக் கொடுமையே காரணம் என அதே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.குடும்பத் தகராறில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.