புதுமணப்பெண்ணை பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிட்டு மிரட்டிய கணவர் - வரதட்சணைக் கேட்டு தாக்கிய மாமனார், மாமியார்!
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில், வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடூரமாகத் துன்புறுத்தியதுடன், பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிட்டுத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லத்தைச் சேர்ந்த அஞ்சுவுக்கும், நந்து தினேஷ் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து ஒரு வாரத்திற்குள்ளேயே கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு மனரீதியான துன்புறுத்தல்களைத் தொடங்கினர்.
பின்னர் அஞ்சுவை சவுதி அரேபியா நாட்டிற்கு அழைத்துச் சென்ற கணவர் நந்து தினேஷ், அங்கு வைத்து அவரைத் தொடர்ந்து உடல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். பிரஷர் குக்கர் மற்றும் லேப்டாப் சார்ஜர் உள்ளிட்டவற்றைக் கொண்டு அவர் அஞ்சுவைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
மேலும், புதுப்பெண்ணைப் பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிட்டு இழிவாகப் பேசியதுடன், அவர் பாலியல் தொழிலில் ஈடுபட விரும்புவதாகத் தவறாக மிரட்டி வீடியோ எடுத்து அதனை அவரது உறவினர்களின் செல்போன்களுக்கு அனுப்பி வைத்து அவமானப்படுத்தியுள்ளனர். இந்த கொடுமைகள் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கணவனையும், கணவர் குடும்பத்தினரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.