பயங்கரம்... மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த  கணவன்  தற்கொலை முயற்சி!  

 

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பொன்னானி பகுதியைச் சேர்ந்த முகமது (23) என்பவர், தனது மனைவி பாத்திமா (21) மீது தீராத சந்தேகம் கொண்டு வந்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இந்தத் தம்பதிக்கு நான்கு மாதக் குழந்தை உள்ளது. மனைவி யாரிடம் பேசினாலும் சந்தேகப்படும் முகமது, அவரை உறவினர்களுடன் கூடப் பேச விடாமல் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 28-ஆம் தேதி நள்ளிரவு மனைவியை அழைத்துக் கொண்டு கடற்கரைக்குச் சென்றுள்ளார்.

கடற்கரையிலும் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த முகமது தனது மனைவியின் துப்பட்டாவாலேயே அவரது கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர் மனைவியின் உடலை அங்கேயே போட்டுவிட்டு, குழந்தையுடன் தப்பிச் சென்றார். அதிகாலையில் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் பாத்திமாவின் சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

தலைமறைவான முகமதுவைத் தேடி வந்த நிலையில், அவர் பரப்பனங்காடி பகுதியில் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றபோது ரெயில்வே போலீசார் அவரைத் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். விசாரணையில், மனைவியைக் கொலை செய்ததை முகமது ஒப்புக்கொண்டார். சந்தேகத்தால் ஒரு இளம் பெண்ணின் உயிர் பறிக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது முகமது மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.