இனி கணவர்களுக்கும், காதலர்களுக்கும் நிம்மதி... ஷாப்பிங் பைகளைச் சுமக்க 'கேரிமென்'  சேவை அறிமுகம்! 

 

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள லஜ்பத் நகர், சாந்தினி சௌக் போன்ற புகழ்பெற்ற மார்க்கெட்டுகளில் தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் ஷாப்பிங் செய்வது வழக்கம். கூட்ட நெரிசல் மிகுந்த இந்த சந்தைகளில் மணிக்கணக்கில் நடந்து, வாங்கும் கனமான பொருட்களைக் கைகளில் சுமந்து கொண்டு அடுத்தடுத்த கடைகளுக்குச் செல்வது எப்போதுமே சோர்வளிக்கும் ஒரு விஷயமாகும். இந்நிலையில், ஷாப்பிங் செய்பவர்களின் சுமையைக் குறைப்பதற்காக 'கேரிமென்' என்ற புத்தம் புதிய, புதுமையான ஷாப்பிங் உதவி சேவை டெல்லியில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

'கரிவேஷ் என்டர்பிரைசஸ் எல்.எல்.பி' என்ற நிறுவனத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்த 'கேரிமென்' சேவை, அடிப்படையில் சந்தைகளில் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்ட உதவியாளர்களை வழங்குகிறது.

இந்தச் சேவையைப் பயன்படுத்தும் போது, வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் பைகளை (12 கிலோ எடை வரை) இந்த உதவியாளர்களே பாதுகாப்பாகச் சுமந்து கொள்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் கைகளில் எந்த எடையும் இல்லாமல் சுதந்திரமாகச் ஷாப்பிங் செய்யலாம். பைகளைச் சுமப்பது மட்டுமன்றி, கடைகளில் பில்லிங் செய்வதற்கு நீண்ட வரிசையில் நிற்பது, பிரபலமான உணவகங்களில் உணவு ஆர்டர் செய்யக் காத்திருப்பது, வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்கக் குடை பிடிப்பது போன்ற பணிகளையும் இந்த 'கேரிமென்' செய்கின்றனர்.

ஷாப்பிங் செய்யும் போது மொபைல் சார்ஜ் தீர்ந்து போனால், பயணத்தின் போதே சார்ஜ் செய்யும் வசதி, முகமூடி, மற்றும் வாடிக்கையாளர்கள் சோர்வடையும் போது சந்தையின் நடுவிலேயே அமர்ந்து ஓய்வெடுக்க மடிக்கக்கூடிய நாற்காலி வசதி போன்ற கூடுதல் அம்சங்களும் இதில் வழங்கப்படுகின்றன.

இந்த டிஜிட்டல் சேவை முற்றிலும் நேரத்தின் அடிப்படையில்மிகக் குறைந்த மற்றும் நியாயமான கட்டணத்தில் வழங்கப்படுகிறது. அவசரமாகக் குறுகிய கால ஷாப்பிங் செய்துவிட்டு, பைகளை மட்டும் மெட்ரோ கேட் அல்லது கார் பார்க்கிங் வரை எடுத்துச் செல்ல ரூபாய் 79 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நடுத்தர அளவிலான ஷாப்பிங் செய்ய விரும்புபவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 149 (சலுகை விலையில் ரூ.119) வசூலிக்கப்படுகிறது.

2 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரையிலான நீண்ட நேர ஷாப்பிங் மற்றும் திருமணப் பர்ச்சேஸ் செய்பவர்களுக்காக ரூபாய் 219 முதல் ரூபாய் 399 வரையிலான சிறப்புச் சலுகை பேக்கேஜ்களும் கிடைக்கின்றன.

சந்தையில் இருக்கும் பிரத்யேக பூத்கள்  அல்லது வாட்ஸ்அப் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த உதவியாளர்களை எளிதாகப் புக் செய்துகொள்ளலாம். பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்தச் சேவையில் ஈடுபடுத்தப்படும் அனைத்து 'கேரிமென்' ஊழியர்களும் காவல்துறையினரால் முறையாகச் சரிபார்க்கப்பட்டு, சீருடை மற்றும் அடையாள அட்டைகளுடன் பூத் கேப்டனின் நேரடிக் கண்காணிப்பில் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றனர்.

முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளுடன் வரும் குடும்பத்தினர் மற்றும் பெண்களிடையே இந்தச் சேவைக்குத் தற்பொழுது டெல்லியில் அமோக வரவேற்புக் கிடைத்துள்ளது. டெல்லியைத் தொடர்ந்து விரைவில் மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுக்கும் இந்தச் சேவை விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.