விநாயகர் சிலை ஊர்வலத்தில் இறைச்சி துண்டுகள் வீச்சு? ஐதராபாத்தில் பரபரப்பு.!

 

 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றபோது இறைச்சி மற்றும் எலும்புத் துண்டுகள் வீசப்பட்டதாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஐதராபாத்தின் மடன்னபேட் பகுதியில் நேற்று விநாயகர் சதுர்த்தி நிறைவு நிகழ்ச்சியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அதே பகுதியில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

allowfullscreen

அப்போது அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் இருந்து இறைச்சி மற்றும் எலும்புத் துண்டுகள் அடங்கிய பொருள் கீழே வீசப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த முகமது இம்ரான் குரேஷி, அர்ஷியா பேகம் மற்றும் சபீனா ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

சம்பவம் தொடர்பாக விநாயகர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். சம்பவம் எவ்வாறு நடந்தது, குடியிருப்பில் இருந்து வீசப்பட்ட பொருள் என்ன, அது எந்த சூழ்நிலையில் அங்கு வீசப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதற்கிடையே, சம்பவத்தைக் கண்டித்து சிலர் அப்பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

எனினும், தற்போது அப்பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், போக்குவரத்து வழக்கம்போல் நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பாக உறுதி செய்யப்படாத தகவல்கள் மற்றும் வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என போலீசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணையில் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.